ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் இறங்கியுள்ளன. மேலும் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தற்சமயம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அதிரடி பேட்டர்கள் பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மையர், ஜான்சன் சார்லஸ், ரோவ்மன் பாவெல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதுதவிர ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெஃபெர்ட், ஜெய்டன் சீல்ஸ், மேத்யூ ஃபோர்ட் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குவென்டின் சாம்ப்சனுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், எவின் லூயிஸ், அல்ஸாரி ஜோசப் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதில் அல்ஸாரி ஜோசப் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நேபாள் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் இணைந்து குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 11ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் நேபாளை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி இத்தாலிக்கு எதிராக தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசைன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்ப்சன், ஜேய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள்

  • குரூப் A: இந்தியா, அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான்
  • குரூப் B: ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்
  • குரூப் C: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம்
  • குரூப் D: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்