கொல்கத்தாவில் இந்தியாவை வீழ்த்த உதவிய சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மருக்கு காயம்?
இந்திய அணி உடனான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உதவிய சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி தற்போது விளையாடி வருகிறது. இதில் கடந்த 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.
இந்நிலையில், அவர் வலது தோள்பட்டையில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்த விவரம் மருத்துவ அறிக்கையில் மட்டுமே தெரியவரும். அதை பொறுத்த இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்யும். முதல் போட்டியில் பீல்டிங் செய்த போது அவர் காயமடைந்தார்.