ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! அமைச்சர் கே.என்.நேரு

ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! அமைச்சர் கே.என்.நேரு

பூத் ஏஜண்ட் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டால் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ’என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ எனும் தலைப்பில், பூத் நிலை முகவர்கள் பிஎல்ஏ2, மற்றும் பூத் டிஜிட்டல் முகவர்கள், பிடிஏ பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் கும்பகோணம் எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ”திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கடந்த ஓராண்டிற்கு முன்பே தேர்தலையொட்டி, பிஎல்ஏ2, பிஎல்சி, பிடிஏ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

வடமாநில தொழிலாளர்களை சேர்த்தால் அவர்கள் 3 அல்லது 4 மாதம் தொடர்ந்து இங்கு வசிப்பவர்களாக இருந்துள்ளார்களா? என்பதை விஏஓ சான்றிதழ் மூலம் சரிபார்க்க வேண்டும். 12 ஆவணங்களில் ஒன்றையும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கொடுத்து எந்த தவறும் இல்லாமல் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த பணி கடுமையானது, இரு மாதங்களுக்கு இதனை சிறப்பாக செய்து முடித்து விட்டால் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவதையோ, திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதையோ எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்திட முடியாது” என்றார்.