தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையம் சர்வாதிகாரப் போக்குடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை தமிழகத்தில் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக படிவங்களை வழங்க சென்றபோது வீடுகள் பூட்டியிருப்பதையும், உரிய வாக்காளர்கள் வீடுகளில் இல்லை. இதனால் படிவங்களை வழங்காமல் அலுவலர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 2002, 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர் உள்ளவர்கள் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் குடியிருந்தவர்கள். இவர்களில் பலரும் தற்போது குடிபெயர்ந்துள்ளனர் என்பதும் களஆய்வில் வெளிப்பட்டு வருகிறது. அதேபோல் 2005 முதல் 2024 வரை பலமுறை சுருக்கம் முறை திருத்தத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட் டுள்ளன.
தற்போது அவர்களின் பெயர்கள் எந்த வாக்குச்சாவடியின் பட்டியலில் உள்ளன என சரிபார்க்க முடியாமல் அலுவலர்கள் திணறுகின்றனர். எனவே தொடக்க நிலையிலேயே தோல்வியடையும் எஸ்ஐஆர் பணியை நிறுத்திவிட்டு, 2024 வாக்காளர் பட்டியல்படி சுருக்கமுறை திருத்தம் மூலம் தேர்தலை நடத்த முன்வரவேண்டும்.