தவெக கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் விசாரணையை தொடங்கிய அஸ்ரா கார்க்!

தவெக கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் விசாரணையை தொடங்கிய அஸ்ரா கார்க்!

தவெக விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழு முதல் கட்ட விசாரணையை தொடங்கியது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கரூர் நகர போலீசார், தவெக வடக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 2 நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நடந்து வந்த விசாரணையை, கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்தன் விசாரிப்பார் என்று அதிகாரியை மாற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை அமர்விலும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு நெறிமுறைகளை வகுக்கும் வரை புதிதாக எந்த ரோடு ஷோவும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிமன்றம் சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை பரிந்துரை செய்தது. மேலும், வழக்கு தொடர்பான ஆணவங்களை உடனடியாக எஸ்ஐடி குழுவிடம் ஒப்படைக்க கரூர் போலீஸுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் மற்றும் கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி அஸ்ரா கார்க்கிடம் நேற்று சென்னையில் வைத்து ஒப்படைத்தார். இந்த நிலையில், இன்று கரூர் வந்த எஸ்ஐடி குழுவினர் தங்களது விசாரணையை மேற்கொண்டனர்.

ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2 எஸ்பிகள், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிகள், 5 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வு நடத்தினர். மேலும், கூட்ட நெரிசல் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில், மதியம் 1.30 மணி - 2.15 மணி வரை 45 நிமிடங்கள் ஆய்வு நடைபெற்றது.

அப்போது, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு காவலர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்தில், கூட்ட நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவிடம் விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை குழு அதிகாரி ஐ.ஜி அஸ்ரா கார்க், “உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். மேலும், விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது” என்றார். தொடர்ந்து, இன்னும் எத்தனை நாட்களில் விசாரணை முடியும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தற்போதைய சூழலில் வேறு எதுவும் கூற இயலாது” எனத் தெரிவித்தார்