நயினார் நாகேந்திரன் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யார்? போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!
நயினார் நாகேந்திரன் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு கடந்த 12ஆம் தேதி இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இரண்டு நபர்கள் அவரது வீட்டை பைக்கில் வந்து நோட்டமிட்டதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
அதேசமயம் நயினார் நாகேந்திரன் தரப்பில் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. எனவே அப்போதே இந்த தகவலை மாநகர காவல்துறை மறுத்தது. குறிப்பாக நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எதுவும் இல்லை, இது போன்ற புகார் எதுவும் தங்களுக்கு வரவில்லை என மாநகர காவல் ஆணையர் சந்தோஷம் ஹாதிணி தெரிவித்திருந்தார்.
அதே சமயம் மர்ம நபர்கள் நோட்டுமிடுவதாக கூறி சிசிடிவி காட்சிகளை நயினா நாகேந்திரன் தரப்பில் வெளியிட்டனர். அதாவது டெல்லி சம்பவத்தை தொடர்ந்து பாஜக முக்கிய நிர்வாகிகள் கவனமாக இருக்கும்படி, கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் கடந்த 12ஆம் தேதி எதார்த்தமாக தனது வீட்டில் சிசிடிவி காட்சிகளை மொபைலில் ஆய்வு செய்துள்ளார். அப்போது இரண்டு நபர்கள் அவரது வீட்டின் முன்பு நின்று அங்குமிங்கும் பார்த்தபடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது
அதன் அடிப்படையில், யாரேனும் மர்ம நபர்கள் தனது வீட்டை நோட்டமிட்டிருக்கலாம் என கருதி, தனக்கு நெருங்கிய காவல்துறை வட்டாரத்தில் நயினார் நாகேந்திரன் மர்ம நபர்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் நயினார் நாகேந்திரன் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
இந்நிலையில், தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதால், இந்த விவகாரத்தில் மாநகர காவல்துறை அதிக கவனம் செலுத்தி விசாரணை மேற்கொண்டது. தீவிர விசாரணைக்கு பிறகு 12ஆம் தேதி இரவு நயினார் நாகேந்திரன் வீட்டில் முன்பு நின்ற மர்ம நபர்கள் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஊழியர் மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், ”உணவு கொடுக்க தான் வந்தோம், முகவரி தேடுவதில் குழப்பம் ஏற்பட்டதால் அந்த இடத்தில் நின்றோம், வேறு ஒன்றும் இல்லை” என கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் உணவு டெலிவரி செய்த வாடிக்கையாளரிடமும் விசாரித்து, போலீசார் உறுதி செய்தனர்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ”கடந்த 12ம் தேதி அன்று இரவு பாஜக மாநில தலைவர் இல்லம் முன் பைக்கில் வந்தது வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் சிவகுமார் மற்றும் அவர்கள் நண்பர். அவர்கள் செயின்ட் ஜோசப் தெருவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு உணவு வழங்க வந்தனர். முகவரி தெரியாததால் நீச்சல் குளம் தெருவிற்கு சென்று, அங்கிருந்த பெயர் பலகையை உற்று பார்த்துள்ளனர். பின்னர் வாடிக்கையாளரின் முகவரியை கண்டுபிடித்து அவருக்கு உணவை வழங்கிவிட்டு சென்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.