கரூர் சம்பவம்: தொடர் தலைமறைவு... முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடிய புஸ்ஸி ஆனந்த்!

கரூர் சம்பவம்: தொடர் தலைமறைவு... முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடிய புஸ்ஸி ஆனந்த்!

கரூர் சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட இருவரும் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகன் ஏற்கெனவே கைதாகி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அது குறித்த விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வந்த போது, "தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளின் பொறுப்பற்ற செயல்பாட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது" என அரசு வாதிட்டது. அதே சமயம், '' பரப்புரையின் போது கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆயுதங்களால் காயங்கள் ஏற்படுத்தியதாகவும், விஜய் மீது காலணிகளை வீசி குழப்பத்தை ஏற்படுத்தியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது" என தவெக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அரசு வாதத்தை ஏற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு கிளம்பியது. இருப்பினும், காவல்துறை பார்வையில் இருந்து இருவரும் தொடர்ந்து தலைமறைவாகி வரும் சூழலில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், அந்த மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி இரு தரப்பிலும் நாளை முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.