விஜய், அஜித் இடத்தினை யார் நிரப்புவார்கள்? - பிரதீப் ரங்கநாதன் பதில்

விஜய் - அஜித் இடத்தினை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.
‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். “விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேசிங் சென்றுவிட்டார். இனி அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்” என்ற கேள்வி பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பிரதீப் ரங்கநாதன், “விஜய் சார் மற்றும் அஜித் சார் ஆகியோருடைய இடைவெளியை யாராலும் நிரப்பவோ அல்லது மாற்றவோ முடியாது. அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து இந்த நிலையினை அடைந்திருக்கிறார்கள். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் படங்களின் திரைக்கதை எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் அதனை வெற்றி பெறச் செய்வார்கள்.
ஒரு வேளை 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையினை யார் அடைவார்கள் என்பது தெரியவரலாம். ஆனால், அதுவும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கைகளில் மட்டுமே இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார். இந்தப் பதில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் சாய் அபயங்கர்.