காரில் வைத்து பெண் மேலாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை! ராஜஸ்தானில் பரபரப்பு
ராஜஸ்தானில் ஐடி நிறுவனத்தின் பெண் மேலாளர் ஒருவரை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சிஇஓ-வாக பணிபுரிந்து வருபவர் ஜிதேஷ் சிசோடியா. இவரது பிறந்தநாளுக்காக கடந்த சனிக்கிழமை அன்று, ஒரு பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஜிதேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் அவரது நண்பர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த ஐடி நிறுவனத்தின் பெண் மேலாளரும் இந்த விருந்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், விருந்து முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது, அந்த பெண் மேலாளரை, அதே ஐடி நிறுவனத்தில் செயல் தலைவராக பணிபுரியும் பெண் ஒருவர் அணுகி, தனது காரில் அவரை வீட்டில் விடுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரது காரில் பெண் மேலாளரும், சிஇஓ ஜிதேஷும் ஏறியுள்ளனர். பெண் செயல் தலைவரின் கணவர் கெளரவ் சிரோஹியும் உடன் சென்றுள்ளார். அப்போது கடை ஒன்றில் இருந்து, சிகரெட் ஒன்றை வாங்கி வந்த அவர்கள், பெண் மேலாளரிடம் கொடுத்துள்ளனர். அதை அவர் பயன்படுத்திய அடுத்த நொடியே அப்படியே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து உதய்பூர் காவல் நிலையத்தில் அந்த பெண் மேலாளர் புகார் அளித்தார்.
இதன்பேரில், சம்பந்தப்பட்ட ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஜிதேஷ் சிசோடியா, பெண் செயல் தலைவர், அவரது கணவர் கெளரவ் சிரோஹி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் மேலாளரை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டதாக உதய்பூர் எஸ்.பி. யோகேஷ் கோயல் தெரிவித்தார்.
பின்னர், நீதிமன்றத்தில் நேற்று (டிச.25) ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும், 4 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.