இரண்டு கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தல் - செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் என்னென்ன?

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடம் வகிக்கிற பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அட்டவணையில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதையும், கடந்த தசாப்தங்களில் எவ்வளவு பேர் வாக்களித்துள்ளனர் என்பதையும் விவரிக்கிறது இந்த தொகுப்பு.
பீகார் மாநிலத்தின் தற்போதைய 17வது சட்டமன்றத்தின் பதவிக்காலமானது வருகிற நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி, அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலானது நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக். 6) அறிவித்தது. வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.
இம்மாநிலத்தில் நக்சல் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தியன் விளைவாக, கடந்த 2 தசாப்தங்களிலேயே இந்த தேர்தல்தான் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தின் சட்டமன்றமானது மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதில் பாஜக 80 எம்.எல்.ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறதுய 77 எம்.எல்.ஏக்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 45 எம்.எல்.ஏக்களுடன் மூன்றாமிடம் வகிக்கிறது. அடுத்து காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இதுபோக, சிபிஐஎம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்களும் பீகார் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். இவற்றில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஜேடியு, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு 2005ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. அந்த தேர்தலின்போது ஏற்பட்ட குழப்பங்களால் ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுத்தது. இதனையடுத்து அங்கு அதே ஆண்டு அக்டோபரில் 4 கட்டங்களாக மறுதேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், நிதிஷ்குமார் முதல்வராக்கப்பட்டார். அடுத்து 2010ஆம் ஆண்டு தேர்தலானது 6 கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் ஜேடியு மற்றும் பாஜக மட்டுமே கூட்டணி வகித்தபோதும், மொத்தம் 243 இடங்களில் 206 இடங்களை கைப்பற்றின. மற்ற கட்சிகள் வெறும் 31 இடங்களை மட்டுமே பிடித்தன. அடுத்து 2015ஆம் ஆண்டு தேர்தல் 5 கட்டங்களாகவும், 2020ஆம் ஆண்டு தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டன.
பீகார் மாநிலம் 92,258 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், சுமார் 13.07 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ளது. ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்போதும் தேர்தல் ஆணையமானது பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஏனென்றால் 243 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இவற்றில், 3.92 கோடி ஆண்கள், 3.50 கோடி பெண்கள் என 7.42 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பர். இதில் ஒரு வாக்குச் சாவடியில் 1200க்கும் அதிகமானோர் வாக்களிக்கக் கூடாது. இந்த வாக்குப்பதிவை கண்காணிக்கவும், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடி இணைய ஒளிபரப்பு செய்யப்படும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் ஆணையம் சார்பில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார். மேலும் 4.5 லட்ச வாக்குச்சாவடி அதிகாரிகள், 2.5 லட்ச காவல்துறை அதிகாரிகள் உட்பட, சுமார் 8.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பீகார் தேர்தலில் பணியாற்ற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.