நகமும் நோயும்: ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் நகங்கள் சொல்வது என்ன?

நகமும் நோயும்: ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் நகங்கள் சொல்வது என்ன?

காய்ச்சல், வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு சென்றால், மருத்துவர் ஒரு டார்ச் பயன்படுத்தி நாக்கு மற்றும் கண்களை முதலில் சோதிப்பார். வலி வயிற்றில் தானே நாக்கில் என்ன பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் சிறுவயதில் அனைவருக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். உள் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனை அல்லது சிறய மாற்றம் வெளி உறுப்புகளில் வெளிப்படும் என்பதை காலப்போக்கில் நாம் அறிந்திருப்போம்.

அப்படி, நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தைக் கொண்டு சில உடல்நலக் கோளாறுகளை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடியும். நகங்கள், உடலின் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது சில நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால், இது ஒரு பொதுவான அறிகுறி மட்டுமே. சரியான நோயறிதலுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

நகங்களின் நிறம் சொல்வது என்ன?

வெளிறிய நகங்கள் (Pale Nails): நகங்கள் மிகவும் வெளிறிய நிறத்தில் இருந்தால், அது ரத்த சோகை (Anaemia) அல்லது இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, கல்லீரல் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டையும் குறிக்கும்.

மஞ்சள் நிற நகங்கள் (Yellow Nails): நகங்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் அது பூஞ்சைத் தொற்றின் (Fungal infection) பொதுவான அறிகுறி. அத்தகைய நிலையில், நகம் தடிமனாகவோ அல்லது நொறுங்கிப் போகவோ வாய்ப்புள்ளது. அரிதாக, இது தைராய்டு அல்லது நுரையீரல் நோய் போன்ற தீவிரமான நோய்களையும் குறிக்கலாம்.

நீல நிற நகங்கள் (Bluish Nails): நகங்களின் கீழ் நீல நிறம் இருந்தால், அது உடலில் போதிய ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கலாம். இது நுரையீரல் அல்லது இதய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.

வெள்ளை கோடுகள் (White Lines - Terry's Nails): நகத்தின் பெரும்பகுதி வெள்ளையாகவும், நுனியில் ஒரு குறுகிய இளஞ்சிவப்பு பட்டையும் இருந்தால், அது கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

நகத்தின் தோற்றம் குறிப்பது என்ன?

வரி வடிவ கோடுகள் (Ridges): நகங்களில் கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக கோடுகள் இருந்தால், அது ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது வயதாவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

குழி நகங்கள் (Pitting Nails): நகத்தின் மேற்பரப்பில் சிறிய குழிகள் அல்லது பள்ளங்கள் இருந்தால், அது தோல் அழற்சி (Psoriasis) அல்லது சொரியாசிஸ் எனப்படும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கோப்புப்படம்

எளிதில் நொறுங்கும் நகங்கள் (Brittle Nails): நகங்கள் எளிதில் உடைந்து அல்லது நொறுங்கிப் போனால், அது ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து பற்றாக்குறை அல்லது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனையைக் குறிக்கும் என Pathogenesis, Clinical Signs and Treatment Recommendations in Brittle Nails: A Review என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகத்தைச் சுற்றியுள்ள வீக்கம் (Swollen Nail Folds): நகத்தைச் சுற்றியுள்ள தோல் சிவந்து, வீக்கமாக இருந்தால், அது ஒரு தொற்று அல்லது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் ஒரு நோயின் பொதுவான குறிகாட்டிகள் மட்டுமே. எனவே, நகங்களில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டால், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.