மன அழுத்தம் மற்றும் பதட்டம் அடிக்கடி வருதா? அப்போ இந்த உணவுகளை இனி தொடாதீங்க!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தொழில்முறை வேலைகள் காரணமாக பலரும் பலவிதமான மனநலப் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். ஆண்களை விட பெண்கள் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டறியப்படாவிட்டால், நிலை மோசமடையும் அபாயம் உள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் உடலில் அதிக அளவு கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிட காரணமாகின்றது. இது பசியின்மை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற சூழலில், தினசரி உணவில் சில மாற்றங்களை செய்வது போதுமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் டி: இந்த வைட்டமின் குறைபாடு மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, மன ஆரோக்கியமாக இருக்க போதுமான வைட்டமின் டி பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது. பால், தயிர், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வெண்ணெய், காளான்கள், முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பது வைட்டமின் டி குறைப்பாட்டை குறைக்கிறது.
இவற்றுடன், பி மற்றும் சி வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவை உடலில் கார்டிசோலின் அளவைக் குறைத்து மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து நிவாரணம் அளிப்பதாக தெரியவந்துள்ளது.
மஞ்சள்: மஞ்சளில் ஆன்டிபயாடிக்காக செயல்படும் குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. National Library of Medicine இதழில் வெளியான ஒரு ஆய்வில், மனச்சோர்வுக் கோளாறு போன்ற மனநலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் குர்குமின் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது. அல்சைமர், மனச்சோர்வு மற்றும் பார்கின்சன் ஆகியவற்றின் தீவிரத்தைக் குறைப்பதிலும் இது முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்: கிளீவ்லேண்ட் கிளினிக்கின் ஒரு ஆய்வில், பதட்டத்தைப் போக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுவதாக தெரியவந்துள்ளது. அவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும், தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கின்றன, மேலும் அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் கூடுதலாக, சில வகையான அமிலங்கள் உடலில் கார்டிசோலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே, கடல் உணவுகளை உணவில் அடிக்கடி சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், வால்நட்ஸ், பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகளைச் சேர்ப்பது நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சிலர் எடை குறைக்க செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள இவற்றைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். செய்ற்கை இனிப்புகள் உடலில் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்கின்றன, இது மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கும் என்கின்றனர்.
குளூட்டன் உணவுகள்: செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் குளூட்டன் (பசையம்) மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. National Library of Medicine இதழில் வெளியான ஒரு ஆய்வு, பசையம் மனச்சோர்வின் அறிகுறிகளுக்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டுகிறது. அதனால் சாக்லேட்டுகள், பிஸ்கட், பாஸ்தா, கோதுமை, ரொட்டி, பீர் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தானியங்கள், ராகி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.