அபிஷேக் சர்மா அதிவேக அரைசதம்: தொடரை வென்று சாதனைகளை குவித்த இந்திய அணி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெறும் 10 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 14 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததே இந்நாள் வரையிலும் சாதனையாக தொடர்கிறது.
பாகிஸ்தான் சாதனையை சமன் செய்த இந்தியா
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டி20 தொடர்களை வென்ற அணி எனும் பாகிஸ்தானின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2016-18ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 11 டி20 தொடர்களை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் இந்திய அணி 2024 முதல் தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.
- 11-இந்தியா (2024 – 2026)
- 11 -பாகிஸ்தான் (2016-18)
- 7 -இந்தியா (2017-18)
- 6 -இந்தியா (2019-21)
சேஸிங்கில் சாதனை
இந்தப் போட்டியில், இந்திய அணி 60 பந்துகள் மீதமுள்ள நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை எட்டி இருந்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 150+ இலக்கை எட்டிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2024 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 37 பந்துகள் மீதமுள்ள நிலையில் 150+ இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்திருந்த நிலையில், அதனை இந்திய அணி முறியடித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா சொந்த மண்ணில் மற்றொரு டி20 தொடரை வென்றுள்ளது. இதன் மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டி20 தொடர்களை வென்ற அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் ஒரு டி20 தொடரை கூட இழந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக T20I தொடர் வெற்றிகள்
- 10 - இந்தியா (2022-26)
- 8 - ஆஸ்திரேலியா (2006-10)
- 7 - இந்தியா (2019-22)
- 5 -பாகிஸ்தான் (2008-18)
அடுத்த போட்டி
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 28ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில் இந்த போட்டியிலும் வெற்றியை பதிவு செய்து அசத்தும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.