ஆஸ்திரேலியா ஓபன் 2026: தோல்வியை தழுவிய நடப்பு சாம்பியன் மேடிசன் கீஸ்

ஆஸ்திரேலியா ஓபன் 2026:  தோல்வியை தழுவிய நடப்பு சாம்பியன் மேடிசன் கீஸ்

 மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மேடிசன் கீஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான ஜெசிகா பெகுலாவிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னின்ஸ் தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீஸ், சக நாட்டவரும் தனது நண்பியுமான ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். நண்பர்களுக்கு இடையிலான இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.

இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெசிகா பெகுலா அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றியதுடன் முதல் செட்டை6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இரண்டாவது செட்டில் நடப்பு சாம்பியன் மேடிசன் கீஸ் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யும் வகையில் அவரால் எதிர்பார்த்த கம்பேக்கை கொடுக்க முடியவில்லை.

இன்று நடைபெற்ற மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, சீனாவின் வாங் சிங்யுவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் செட்டை யார் கைப்பற்றுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் அனிசிமோவா 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி வென்றார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்திய அனிசிமோவா 6-4 என்ற செட் கணக்கில் வாங் சிங்யுவை வீழ்த்தினார். இதன் மூலம் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா வெற்றியை பதிவு செய்ததுடன், நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னின்ஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார். இதனையடுத்து நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அவர் ஜெகிகா பெகுலாவை எதிர்கொள்ளவுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், செக் குடியரசின் ஜக்குப் மென்சிக்-யை எதிர்கொள்ள இருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜக்குப் மென்சிக் காயத்தை சந்தித்ததன் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக நோவாக் ஜோகோவிச் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.