கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து!

கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்து அருந்திய 17 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அந்நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்துகளை உட்கொண்ட 17 குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் 'டை எத்திலீன் கிளைக்கால்' (DEG) எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த 'கோல்ட்ரிஃப்' (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.
அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் (samples) கைப்பற்றப்பட்டன. அதில். உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு அதில் 48.6% 'டை எத்திலீன் கிளைக்கால்' என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், "கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மாநிலங்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடந்த 1ஆம் தேதி கடிதம் அனுப்பின. இதையடுத்து, அன்றைய தினமே மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் குருபாரதி தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிப் (பேட்ஜ் 13) உள்பட 5 மருந்துகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர்.
அதில், டை எத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம், கோல்ட்ரிப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது கடந்த 2 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் கோல்ட்ரிப் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஒடிசா, புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டன. மேலும், அந்த நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதிகாரிகளால் கடந்த 3ஆம் தேதி ஸ்ரீசென் பார்மா நிறுவனம் மூடப்பட்டது.
இதனிடையே, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் வரும் 12 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கால அவகாசம் முடிந்ததை தொடர்ந்து ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.