மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் நீர்வளத்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள், அதன் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இந்நிலையில், மேட்டூர் அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டி இருந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அணையில் இருந்து 35,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு 35,000 கன அடியிலிருந்து 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீரை திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் உடைமைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு, கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு, மேட்டூர் நீர்வளத் துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று மாலை 6:00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக கணக்கிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 35,500 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

உபரிநீர் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,300 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மேட்டூர் அணையின் 16-ஆவது கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர், விநாடிக்கு 12,700 கன அடியில் இருந்து 22,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.