நடப்பு சாம்பியனை தொடரும் சோகம் - ஹோம் போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாற்றும் ஆர்சிபி

நடப்பு சாம்பியனை தொடரும் சோகம் - ஹோம் போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாற்றும் ஆர்சிபி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் போட்டிகளை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க செயலாளர் கம்லேஷ் பிசால் ஈடிவி பாரத்திடம் கூறியுள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நடந்து முடிந்தது. இதில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து, ஆர்சிபி நிர்வாகம் ரசிகர்களுடன் இதனை கொண்டாட வேண்டும் என்பதற்காக, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அச்சம்பவத்திற்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானம் போட்டிகளை நடத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டதுடன், அங்கு நடைபெற இருந்த மகாராஜா பிரீமியர் லீக், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் ஆகியவை வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன.

மேற்கொண்டு, கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வேறு நிர்வாகத்திற்கு விற்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவே அந்த அணி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்சமயம் மற்றுமொரு தகவல் வெளியாகி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, எம்.சின்னசாமி மைதானம் விளையாட்டு போட்டிகளை நடத்த தகுதியற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் ஹோம் மேட்ச்சுகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளன. இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணியானது முதல் முறையாக சொந்த மைதானத்திலிருந்து வேறு மைதானத்தில் தங்களுடைய ஹோம் போட்டிகளை விளையாடவுள்ளது.

இதற்கு முன் கடந்த 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் மொத்த ஐபிஎல் தொடரும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா காலத்திலும் மட்டுமே ஆர்சிபி அணி சொந்த மைதான போட்டிகளை வேறு இடத்தில் விளையாடி இருந்தது. ஆனால் அவை இரண்டுமே போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாகவே வெறு மைதானத்தில் நடைபெற்றிருந்தது. ஆனால் இம்முறை ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் ஹோம் மேட்ச்சுகளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.