விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், நட்சத்திர வீரர்களுக்கான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் தற்சமயம் எதிர்வரும் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இருவரும் விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே பிசிசிஐ தரப்பில் வலியுறுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட விரும்பும் பட்சத்தில், உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் விராட் கோலியின் நிலைப்பாடு குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் பிசிசிஐ இந்த முடிவில் உறுதியாக இருப்பதன் காரணமாக விராட் கோலியும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவரது மாநில அணியான டெல்லிக்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் தொடங்கும் நிலையில், ஜனவரி 8ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடையவுள்ளது.