இந்தியன் ஓபன் 2026: காலிறுதிக்கு முன்னேறிய லக்ஷயா சென்; ஸ்ரீகாந்த், பிரனாய் ஏமாற்றம்
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்சின் கிறிஸ்டோ போபோவ்-வை எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட கிறிஸ்டோ 21-14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து கம்பேக் கொடுத்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் இப்போட்டியின் முடிவு மூன்றாவது செட்டை நோக்கி சென்றது.
மூன்றாவது செட்டில் ஸ்ரீகாந்த் கடுமையாக போராடிய நிலையிலும், 17-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் 21-14, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதேசமயம் தோல்வியைத் தழுவிய கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஹச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூரை சேர்ந்த லோ கீன் யூ-வை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டில் அபாரமாக செயல்பட்ட பிரனாய் 21-18 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
அந்த செட்டை கீன் யூ 21-19 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டையும் 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் கீன் யூ 18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஹச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றனர். இதில் லக்ஷயா சென் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை வென்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டமும் பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றது. அதில் சிறப்பாக செயல்பட்ட லக்ஷயா சென் 21-10 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் லக்ஷயா சென் 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.