பிளேயிங் லெவனில் துருவ் ஜூரெலை விட்டுவிட முடியாது - ரியான் டென் டோஷேட்

பிளேயிங் லெவனில் துருவ் ஜூரெலை விட்டுவிட முடியாது - ரியான் டென் டோஷேட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் விளையாடுவார் என்று அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் காயத்தில் இருந்து மீண்டிருக்கும் ரிஷப் பந்த் நேரடியாக அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் துருவ் ஜூரெலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

ஒருவேளை ஜூரெல் அணியில் இடம் பிடிக்கும் பட்சத்தில் யார் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறுவார் என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் துருவ் ஜூரெல் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய டோஷேட், "இந்த டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் துருவ் ஜூரெலை விட்டுவிட முடியாது என்பதுதான் சுருக்கமான பதில். ஆனால், உங்களால் 11 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். எனவே வேறு யாராவது தவறவிட வேண்டும். இந்த கூட்டணியைப் பற்றி நமக்கு நல்ல யோசனை இருக்கிறது என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களில் துருவ் விளையாடிய விதத்தைப் பார்க்கும் போது, அணியின் பிளேயிங் லெவனில் அவர் இடம் பிடிப்பது உறுதி"என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "மேலும் அணியில் வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா என மூன்று ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். எனவே இது எங்களுக்கு நிறைய நெகிழ்வுத்தன்மையைத் தருகிறது. அதனால் இந்த போட்டியில் துருவ் மற்றும் ரிஷப் இருவரும் ஒன்றாக விளையாடுவதை நிச்சயம் பார்க்கலாம். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன்" என்றார். இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் விளையாடுவது உறுதியாகியுள்ளது.