பிடிபிஏ-வில் வெளிப்படைத்தன்மை இல்லை: அமைப்பிலிருந்து விலகி ஜோகோவிச் அதிரடி

பிடிபிஏ-வில் வெளிப்படைத்தன்மை இல்லை: அமைப்பிலிருந்து விலகி ஜோகோவிச் அதிரடி

தான் இணைந்து உருவாக்கிய தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்திலிருந்து முழுமையாக விலகுவதாக டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டின் புகழ் பெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரையிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. உலகின் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த டென்னிஸ் தொடர் யார் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரராக கருதப்படும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்திலிருந்து (PTPA - Professional Tennis Players Association) விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஜோகோவிச்சின் இந்த முடிவு டென்னிஸ் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்கள் சுதந்திரமான குரல் எழுப்ப வழிவகை செய்வதற்காகவும், ஜோகோவிச் மற்றும் கனடா டென்னிஸ் வீரர் வாசக் போஸ்பிசில் ஆகியோர் இணைந்து ஒரு லாப நோக்கற்ற அமைப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்தை உருவாக்கினர். ஆனால் தற்போது அந்த அமைப்பின் செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜோகோவிச் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜோகோவிச் எக்ஸ் பதிவில், "ஆழ்ந்து பரிசீலித்த பிறகு, தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்திலிருந்து முழுமையாக விலகி கொள்ள நான் முடிவு செய்துள்ளேன். வெளிப்படைத்தன்மை, நிர்வாகம் ஆகியவற்றை பரிசீலித்த பிறகே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஏனெனில் தற்சமயம் அமைப்பின் அணுகுமுறையும், அவர்கள் பயணிக்கும் திசையும் எனது நோக்கங்களுடன் ஒத்துப்போகவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலு அவர் தனது பதிவில், "இனி வரும் காலங்களில் நான் எனது விளையாட்டு, குடும்பம் மற்றும் எனது கொள்கைகளை பிரதிபலிக்கும் வழிகளில் இந்த டென்னிஸ் விளையாட்டிற்கு பங்களிப்பதில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். இனி இந்த அமைப்பின் மூலம் முன்னேறிச் செல்லும் வீரர்களுக்கும், அமைப்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், என்னைப் பொறுத்தவரை, இந்த அமைப்பில் என்னுடைய அத்தியாயம் இதோடு முடிந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.