உடல் நலம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றி மனிதக் கழிவு மூலம் அறிவதென்ன?

உடல் நலம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றி மனிதக் கழிவு மூலம் அறிவதென்ன?

ஆஸ்திரேலியா முழுக்க கழிவுநீரை ஆய்வு செய்ததில், பணவசதி உள்ளவர்கள் மற்றும் ஏழைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்ற வித்தியாசத்தைக் காண முடிந்தது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில், வழக்கத்திற்கு மாறான சில சோதனைப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன: ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோரின் மனிதக் கழிவுகள் அங்கு சேமித்து, பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உறைய வைக்கப்பட்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேறுபட்ட சமூக வர்க்கத்தினரின் உணவுப் பழக்கங்களைப் பற்றி அறிவதற்கு உதவும், புதையல்களாக அவை கருதப்படுகின்றன. அவற்றை எல்லாம் சேகரிப்பதன் முக்கிய காரணம்?

ஆய்வாளர் ஜேக் ஓ'ப்ரையனும், பி.எச்டி மாணவர் பில் ச்சோய் என்பவரும், ஆஸ்திரேலியாவில் 2016இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த மாதிரிகளைச் சேகரித்தனர். இது மாதிரியான முதலாவது ஆய்வாக இது அமைந்துள்ளது.