சஞ்சு சாம்சன், குன்னுமல் சதத்தால் கேரள அணி அபார வெற்றி
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் கேரளா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் கேரளா மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர்.
பின்னர் 5-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த குமார் குஷாக்ரா மற்றும் அனுகுல் ராய் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய குஷாக்ரா தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடி வந்த அனுகுல் ராயும் அரை சதம் கடந்த கையோடு, 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த குமார் குஷாக்ரா 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 143 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களைச் சேர்த்தது. கேரளா அணி தரப்பில் நிதீஷ் 4 விக்கெட்டுகளையும், பாபா அபராஜித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேரளா அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ரோஹன் குன்னும்மல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவருமே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ரோஹன் குன்னும்மல் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின், 8 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்த நிலையில் குன்னுமல் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன், இந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தான் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே சதம் விளாசி அசத்தினார். பின்னர் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 101 ரன்களுக்கு சஞ்சு சாம்சனும் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் பாபா அபராஜித் 41 ரன்களையும், விஷ்ணு வினோத் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்தனர். இதன் மூலம் கேரளா அணி 43.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் விளாசிய ரோஹன் குன்னுமல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.