ரஞ்சி கோப்பை: சர்பராஸ் கான் இரட்டை சதம் விளாசல்

ரஞ்சி கோப்பை: சர்பராஸ் கான் இரட்டை சதம் விளாசல்

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் மும்பை - ஹைத​ரா​பாத் அணி​களுக்கு இடையி​லான ஆட்டம் ஹைத​ரா​பாத் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் ஆட்டத்​தின் முடி​வில் 87 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்புக்கு 332 ரன்​கள் குவித்​தது. சர்பராஸ் கான் 142, ஹிமான்ஷு சிங் ரன் ஏதும் எடுக்​காமல் களத்​தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய மும்பை அணி 123.2 ஓவர்​களில் 560 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது. அபார​மாக விளை​யாடிய சர்​ப​ராஸ் கான் 219 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 19 பவுண்​டரி​களு​டன் 227 ரன்கள் விளாசி ரக்​சன் ரெட்டி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய சுவேத் பார்​கர் 98 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 11 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் சேர்த்​தார். ஹைத​ரா​பாத் அணி தரப்​பில் ரக்​சன் ரெட்டி 4, ரோஹித் ராயுடு 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

இதைத் தொடர்ந்து விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 41 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்புக்கு 138 ரன்​கள் எடுத்​தது. அபி​ராத் ரெட்டி 4, அமன்ராவ் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ராகுல் சிங் 82, கோடிமேலா ஹிமதேஜா 40 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.