ஐபிஎல் 2026: முஸ்தஃபிசூர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

ஐபிஎல் 2026: முஸ்தஃபிசூர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

எதிர் வரும் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்நாட்டு கிரிக்கெட் வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு எதிரான குரல்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

ஏனெனில் கடந்த மாதம் நடைபெற்ற வீரர்கள் மினி ஏலத்தில் கேகேஆர் அணி அவரை ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இந்த நிலையில் தான், வங்கதேசத்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை காரணம் காட்டி, அந்நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட வைக்க கூடாது என்ற குரல்கள் எழத் தொடங்கியன. குறிப்பாக ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்திருந்தன.

மேலும், முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, "சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர் வரும் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கேகேஆர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐபிஎல்-இன் ஒழுங்குமுறை அமைப்பான பிசிசிஐ, வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தியது.

பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின் பேரில், உரிய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு நாங்கள் முஸ்தஃபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்கின்றோம். அதே சமயம் முஸ்தஃபிசூர் ரஹ்மானிற்கான மாற்று வீரரை தேர்வு செய்யவும் பிசிசிஐ எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளது. இதனால் அந்த அணி மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிகளின்படி, ஏலத்திற்குப் பிறகு ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாட மறுத்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதுடன், அவர்களின் ஒப்பந்த தொகையும் வழங்கபட மாட்டாது. அதே சமயம் வீரர்கள் காயம் காரணமாக தொடரை விட்டு விலகும்பட்சத்தில் அவர்களுக்கான ஒப்பந்த தொகையை ஐபிஎல் அணிகள் வழங்கும்.

ஆனால் இங்கு முஸ்தஃபிசூர் ரஹ்மானின் நிலை வேறு. ஏனெனில் அவர் தாமாக தொடரில் இருந்து விலகவில்லை. மாறாக அரசியல் பதற்றங்கள் மற்றும் பிசிசிஐயின் உத்தரவின்பேரில் கேகேஆர் அவரை விடுவித்துள்ளது. இதனால் தற்சமயம் அவருக்கான ஒப்பந்த கட்டணத்தை செலுத்தப்படுமா? என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.