எஸ்ஐஆர் பணிகள் எங்களுக்கு ஒன்னுமே புரியலை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை

எஸ்ஐஆர் பணிகள் எங்களுக்கு ஒன்னுமே புரியலை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "0எஸ்ஐஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்னுமே புரியவில்லை" என்று தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை சந்தித்து எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

இதன் பின்னர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக முகாம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து அதிமுக சார்பாக எங்களது பொறுப்பாளர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருகின்றனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சத்துணவு ஆயாக்கள், தூய்மைப் பணியாளர்கள் எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மதுரையில் நிறைய பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை. வாக்காளர்களிடம் வழங்கப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை நிறைய இடங்களில் திரும்ப பெறவில்லை. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதில், நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம். ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ? என்கிற அச்சம் வருகிறது.

முன்பெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வந்து மனு கொடுத்துவிட்டு திரும்ப செல்லும்போது நிறைவாக இருக்கும். இந்த எஸ்ஐஆர் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் எங்களுக்கு நிறைவாக இல்லை. வருத்தத்துடன் திரும்பி வந்துள்ளோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் நாங்கள் புகார் தெரிவிப்போம். கொடுக்கப்பட்ட படிவங்கள், வாக்காளர்களிடம் இருந்து திரும்ப வாங்கப்பட்ட படிவங்கள் குறித்து வெளிப்படையான அறிவிப்பு இல்லை," என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறூம்போது, "மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார். எனவே திமுக போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.‌ எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளுங்கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கண்காட்சியில் உணவுத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட பந்தல் மழையால் சேதமடைந்து தண்ணீர் உள்ளே வந்தது வருத்தம் அளிக்கிறது. அதிமுக தலைமையினான கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக ஆறு மாதங்களில் வருவார். அப்போது இவற்றையெல்லாம் சரி செய்வோம்'' என்று செல்லூர் ராஜு கூறினார்.