மேட்ச் ஃபிக்ஸிங்: அசாம் அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் இடைநீக்கம்
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் போது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக நான்கு வீரர்களை அசாம் மாநில கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது
இந்தியாவின் பாரம்பரியமிக்க டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் தற்சமயம் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், சூப்பர் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்ற்ன. இந்த நிலையில் நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரியான் பராக் தலைமையிலான அசாம் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இந்த நிலையில் தான் நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும் அமித் சின்ஹா, இஷான் அகமது, அமன் திரிபாதி மற்றும் அபிஷேக் தாகுரி ஆகிய நான்கு வீரர்களையும் அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தால் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் இந்த நான்கு வீரர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை தொடங்குவதற்காக, அம்மாநில கிரிக்கெட் சங்கம் மாநில காவல்துறையின் குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அசாம் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சனாதன் தாஸ் கூறுகையில்,"வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. ஏசிஏ-வும் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.மேலோட்டமாகப் பார்க்கும்போது, விளையாட்டின் நேர்மையை பாதிக்கும் கடுமையான முறைகேடுகளில் அவர்களின் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் வகையில் மாநில கிரிக்கெட் சங்கம் அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் வீரர்கள் மீதான விசாரணையின் இறுதி முடிவு அல்லது கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த முடிவும் வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும். விசாரணை முடியும் வரை அசாம் கிரிக்கெட்டிற்குள் ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தற்சமயம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நான்கு வீரர்களும், அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் போட்டிகள், அதனுடன் இணைந்த கிளப்புகளால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்கள் போட்டி நடுவர், பயிற்சியாளர் போன்ற கிரிக்கெட் தொடர்பான செயலிலும் ஈடுபடுவதற்கும் போருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவானது கிரிக்கெட்டின் தரத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மேட்ச் ஃபிக்ஸிங் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.