அணியிலிருந்து ஒதுக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சன் என்ன தவறு செய்தார்? ராபின் உத்தப்பா காட்டம்

அணியிலிருந்து ஒதுக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சன் என்ன தவறு செய்தார்? ராபின் உத்தப்பா காட்டம்

நீங்கள் அணியிலிருந்து ஒதுக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சன் என்ன தவறு செய்தார்? என்று இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, குயின்டன் டி காக்கில் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 213 ரன்களைக் குவித்தது. இதில் டி காக் 90 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா 62 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்திய அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 15ஆம் தேதி தரம்சாலா நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டனின் செயல்பாடுகள் குறித்து தற்சமயம் கடும் விமர்சன்ங்கள் எழத்தொடங்கியுள்ளன.

ஏனெனில் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட்டில் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். மேலும் தற்சமயம் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க தொடரில் இருவரது பேட்டிங் ஃபார்மும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதேசயம் சிறப்பான ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளன.

ஏனெனில் சஞ்சு சமசன் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று சதங்களை விளாசியதுடன், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய தொடரின் போது பிளேயிங் லெவனிலிருந்து ஓரங்கட்டபட்ட அவருக்கும், தற்போது வரையிலும் வாய்ப்பு வழங்கப்படாமல் பெஞ்சியில் அமரவைக்கப்பட்டு வருகிறார்.

அதேசமயம் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தொடர்ந்து சொதப்பும் நிலையிலும், அவர்கள் கேப்டன்சி என்ற காரணத்தை காட்டி அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழைத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து சொதப்பும் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தப்பா, "எனக்குள் ஒரு கேள்வி உள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது கூட்டணி அப்படி என்ன பெரிய தவறு செய்தது. எதன் காரணமாக அவர்களது தொடக்க கூட்டணியை மற்றினீர்கள்? தொடருக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் சூர்யா சொன்னதை நான் புரிந்துகொள்கிறேன். சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே உண்மையில் ஷுப்மன் டி20 அணியில் இருந்திருக்கிறார்

ஆனால் சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, ​​அவர் மூன்று சதங்கள் அடித்தார். இங்குள்ள இளம் வீரர்களில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீரர் அவர்தான். அதற்குப் பிறகுதான் திலக் வர்மா சதமடித்தார், அதனைத் தொடர்ந்து தான் அபிஷேக் சர்மா சதமடித்தார்.எனவே, அவர் ஒருவேளை மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களுக்கு சவாலாகவும் இருந்திருக்கலாம்.

ஏனென்றால், அந்த நேரத்தில் இந்திய டி20 கிரிக்கெட்டின் அடுத்த தொடக்க வீரர் யார்? என்ற சிக்கலில் இந்தியா இருந்தது. அந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் தன்னை நிரூபித்து காட்டினார். இருப்பினும் அவரை மிடில் ஆர்டருக்கு நகர்த்திய நீங்கள் தற்போது மெதுவாக அணியின் பிளேயிங் லெவனிலிருந்தும் கழற்றி விட்டுள்ளீர்கள். அப்பது நீங்கள் அணியிலிருந்து ஒதுக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சன் என்ன தவறு செய்தார்? என்பதே என்னுடைய கேள்வி.

தற்போது அணியின் துணைக்கேப்டனாக இருக்கும் ஷுப்மன் கில் தனது இடத்தை தக்கவைக்க பல்வேறு விஷயங்களை முயற்சி செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது அவருக்குப் பலனளிக்கவில்லை. அதனால், அவர் துணை கேப்டனாக இருந்தாலும், அவரும் நிச்சயமாக அழுத்தத்தை உணர்கிறார். ஆனால் தவறு எதுவும் செய்யாதபோதிலும், சஞ்சு சாம்சன் இப்போது அணியில் இடம்பெறாதது பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

ராபின் உத்தப்பா கூறுவது போல், சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காத அளவிற்கு என்ன தவறு செய்தார் என்ற கேள்வியை ரசிகர்களும் எழுப்பி வருகின்றன. அதிலும், தொடக்க வீரராக அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளது ஒரே ஆண்டில் மூன்று சதங்களை விளாசிய நிலையிலும், ஏன் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.