தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காகப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமானது 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம். கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி சுமார் 1,13,75,492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பிரம்மாண்ட நிகழ்வில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதிதாக 16,94,339 பெண்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 1.30 கோடி பெண்கள் மாதந்தோறும் தங்கள் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர்.
அதே நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், "மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் அரசு மகளிர் உரிமைத் தொகையை எப்போதிலிருந்து உயர்த்தி வழங்கப் போகிறது எவ்வளவு உயர்த்தி வழங்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தேர்தல் வாக்குறுதியிலோ அல்லது தேர்தலுக்கு முன்பே உரிமைத்தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, விண்ணப்பித்தும் பலருக்கு உரிமைத் தொகை கிடைக்காத சூழலில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி இரண்டாம் கட்டத்திலும் விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த மகளிர் விடுபடக்கூடாது எனும் நோக்கத்தில் KMUT இணையதளத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்திருந்தது.
விண்ணப்பிப்பது எப்படி ? உரிய ஆவணங்களுடன்அருகிலுள்ள e-Sevai / CSC மையம் மூலம் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது www.kumt.in gov.in இணையதளத்திற்கு சென்று குறைதீர்வு/Grievance சேவையை தேர்வு செய்து விண்ணப்பதாரர் பெயர், குடும்பத்தலைவரின் பெயர், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண் விவரங்களை சமர்ப்பித்த பிறகு, புகார் அளித்த செல்போன் நம்பருக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP-ஐ பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் தங்கள் குறையை பதிவு செய்யலாம். அத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி விபரம் உள்ளிட்ட ஆவணங்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் வழியாக புகார் பதிவு செய்யப்பட்டவுடன், அது வருவாய் கோட்டாட்சியர் மூலம் பரிசீலிக்கப்படும். பின்னர் தகுதியானவர்களுக்கு உரிமை தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2-ஆம் கட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகள் மட்டுமே குறைத்தீர்வுகளை சமர்ப்பிக்க இயலும் எனவும் ஏற்கனவே குறைதீர்வு சமர்ப்பிக்கப்பட்ட குடும்ப அட்டை எண் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி மீண்டும் குறைதீர்வை சமர்ப்பிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது