இன்று மாலை சூரசம்ஹாரம்! திருச்செந்தூரில் அலை கடலென திரண்டு வரும் பக்தர்கள்!
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22 ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. ஆறு நாட்கள் கடும் விரதம் இருந்து வந்த முருக பக்தர்களும் பொதுமக்களும் முருகனை காணவும், சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் இங்கு வந்துள்ளனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறக் கூடிய சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கு நேற்று (அக்.26) மாலை முதலே திருச்செந்தூரை நோக்கி பக்தர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். கோயில் கந்த சஷ்டி மண்டப வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக குழந்தை வரம், திருமண வரம், தொழில் வளம் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் முன்வைத்து கடும் விரதம், பால் - பழம் மட்டும் சாப்பிடும் விரதம் என பல்வேறு விரதங்கள் இருக்கின்றனர். அதனுடன், முருகன் அருளை பெற சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்த்து விட்டு மறுநாள் நடைபெற கூடிய திருக்கல்யாண நிகழ்ச்சியையும் பார்ப்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள், கோயில் வளாத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இந்த ஆண்டு 4000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 250 கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 2 ட்ரோன் கேமராக்களும், அதனை கண்காணிப்பதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மருத்துவ உதவிகளுக்காக சுமார் 20 மருத்துவர்கள் மற்றும் 50 செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 14 ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுபோக, 650 தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 400 தற்காலிக கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி பக்தர்கள் இறங்குமிடத்திலிருந்து திருக்கோயிலுக்கு வருவதற்காக கிட்டத்தட்ட 45 இலவச பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நிகழ்வு முடிந்து கடற்கரையில் குளிக்கச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக நீச்சல் தெரிந்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என 80 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.