BREAKING: விருதுநகரில் திடீர் நிலநடுக்கம்! மக்கள் பீதி
விருதுநகர் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இன்றிரவு 9 மணிக்கு மேல் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் பதற்றமடைந்து தங்களது வீடுகளை விட்டு அவசர அவரசமாக வெளியேறினர்.
முதலில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது கல் குவாரிகளில் வெடிவிபத்து ஏற்பட்டதா என்கிற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் முழு விசாரணை மேற்கொண்டனர். அதில் எங்கும் விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பின்னர் சற்று நேரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 -ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்திருந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட நில அதிர்வு உணரப்பட்டதால் மாவட்ட மக்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்லாமல் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் நில அதிர்வால் பொதுமக்களுக்கோ, அவர்களின் வீடுகளுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.