'மகாராஷ்டிரா - கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்'' - தெற்கு ரயில்வே ஏற்பாடு

'மகாராஷ்டிரா - கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்'' - தெற்கு ரயில்வே ஏற்பாடு

ஐதராபாத், திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை, தென்காசி வழியாக நான்டேட் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் பொங்கல் வரை தொடர்ந்து 9 வாரம் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் செல்லும் பாதையில் முக்கிய ஆன்மீக தலங்கள் இருப்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளதாக தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நான்டேட் ரயில் நிலையத்திலிருந்து ஐதராபாத், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை விழுப்புரம் திருச்சி மதுரை தென்காசி புனலூர் வழியாக கொல்லம் வரை ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்படி வண்டி எண் 07111 நான்டேட் - கொல்லம் சிறப்பு ரயில் நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மாலை 4 மணிக்கு காச்சிகுடா ( ஹைதராபாத் ) வந்து, வெள்ளிக்கிழமை காலை 8.35 மணிக்கு திருப்பதி, மதியம் 12:40க்கு திருவண்ணாமலை, தென்காசிக்கு வெள்ளிக்கிழமை இரவு 10:30 க்கு வந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கொல்லம் சென்று அடையும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 07112 கொல்லம் - நான்டேட் சிறப்பு ரயில் நவம்பர் 22 முதல் ஜனவரி 17 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு மதியம் 12 மணி, திருவண்ணாமலைக்கு இரவு 10.20 மணி, திருப்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.40 மணி, காச்சிகுடாவுக்கு மதியம் 2.40 மணி, (ஹைதராபாத்) வந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு நான்டேட் சென்று அடையும்.

மொத்தம் 1777 கிமீ தூரம் கொண்ட நான்டேட் - கொல்லம் இடையே புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, ரசம்பேட்டா, கடப்பா, ஏறகுண்ட்லா, தாடிபத்திரி, கூட்டி, தோனே, கர்னூல், கத்வால், வான்பார்த்திரோடு, மகபூப் நகர், ஜட்செர்லா, காச்சிகுடா, போலரும், மெட்செல், காமரெட்டி, நிஜாமாபாத், பசார், தர்மாபாத், முட்கேட் உள்ளிட்ட 39 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன் பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ''தென்காசி வழியாக திருவண்ணாமலை, திருப்பதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் ஐதராபாத், திருப்பதி, திருவண்ணாமலை வழியாக தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தென் மத்திய ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தென்காசி வழியாக நீண்ட தூரம் இயக்கப்படும் முதல் சிறப்பு ரயில் இது தான்.

இந்த சிறப்பு ரயில் சேவை ஆன்மீகம், சுற்றுலா, கல்வி, மருத்துவம், பொருளாதார வளர்ச்சி உட்பட பல்வேறு விஷயங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே 5 மாநிலங்கள் வழியாக இயங்கும் இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவதற்கான நடவடிக்கையை ரயில்வே துறை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ள நெல்லை - சிமோகா சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்.'' என பாண்டியராஜா கூறினார்.