காட்பாடி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை - அமைச்சர் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!

காட்பாடி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை - அமைச்சர் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!

காட்பாடி சிப்காட் தொழிற்பேட்டையில் பத்து பேருக்கு வேலை கொடுக்கப்படும்போது, குறைந்தது ஏழு பேர் காட்பாடி தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சேர்காடு பகுதியில் ரூ.15.69 கோடி மதிப்பில் 60 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று, நேரில் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

நிகழ்ச்சியில் பேசும் போது அமைச்சர் துரைமுருகன், “காட்பாடி தொகுதியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது, இளநிலை படிப்புகளை முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் காட்பாடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அவர் மேலும், “அந்த தொழிற்பேட்டியில் பத்து பேருக்கு வேலை கொடுக்கப்படும்போது, குறைந்தது ஏழு பேர் காட்பாடி தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது நடந்திருக்காவிட்டால், நானே நேரில் போராட்டம் நடத்த தயார்” என்றெச்சரித்தார்.

மருத்துவ சேவைகளில் முன்னேற்றம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெஞ்சுவலி போன்ற அவசர நிலைகளுக்காக லோடிங் டோஸ்கள் எனப்படும் அவசர மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மருந்துகள் மூலம் 40,000 பேரது உயிர் காக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நாய் கடி மற்றும் பாம்பு கடி ஆகியவற்றுக்கு உரிய சிகிச்சைக்கான மருந்துகள் மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், மருந்துகள் போதியளவில் உள்ளதா? என்பதையும், அவை சரியான முறையில் நிர்வகிக்கப்படுகிறதா? என்பதையும் அரசு தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது என அவர் கூறினார்.

மழைக்கால முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

மருத்துவக் கல்லூரி கோரிக்கை

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் எப்போது துவங்கப்படும்? என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தமிழக முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் மத்திய நலத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். மத்திய அரசும் இதற்கு நேர்மறையான பதிலளித்துள்ளது” என தெரிவித்தார்.

இருமல் மருந்து குறித்த நடவடிக்கை

இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டதையடுத்து, அந்த வகை மருந்துகளை தமிழக அரசு வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும், இதே அறிவுறுத்தல் மற்ற மாநிலங்களுக்கும் பகிரப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

மேலும், மருந்துகள் இல்லை என்று புகார் வந்தால், அதனை உரிய விதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.