கோவை ஜி.டி.நாயுடு பாலம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

கோவையில் புதிதாக கட்டப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு பாலம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், இன்று (அக்.13) அதிகாலை 2 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார் ஒன்று பயணித்துள்ளது. பாலத்தில் இருந்து வேகமாக இறங்கியபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இருகூரை சேர்ந்த ஷேக் உசேன், ஒரு பெண் மற்றும் இளைஞர் என மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் விவரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையிலேயே நடந்துள்ள இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோவை - அவினாசி சாலையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கி.மீட்டர் துாரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.