மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

இந்த ஆண்டுக்கான மண்டல - மகர விளக்கு பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க இன்று (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து, யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனை எழுப்ப கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுகிறார். அதன்பின் ஐயப்ப பக்தர்கள் இருமுடியுடன் 18 ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்யத் துவங்குவர். டிசம்பர் 27ம் தேதி பிரதான மண்டல பூஜையுடன் நடை அடைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்து 2026 ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படுகிறது. இடையில், ஜனவரி 14ம் தேதி சிறப்பு பெற்ற "மகர ஜோதி தரிசனம்" நடைபெறவுள்ளது. 62 நாட்கள் நீண்டிருக்கும் பூஜைக்காலத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் இடம், மருத்துவம், சுகாதாரம், உணவு, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாத்திரை காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, நாளொன்றுக்கு அதிகபட்சமாக 90,000 பக்கர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுக்கின்றனர். இணையவழி முன்பதிவு மூலம் 70,000 இடங்களும், நேரடி முன்பதிவு மூலம் 20,000 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்படும் இணையவழி இடங்கள், நேரடி முன்பதிவு ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுக்கின்றனர்.