புதினின் ‘பறக்கும் அதிபர் மாளிகை’ - அதிநவீன சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இலுயுஷின் ஐஎல் - 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானம், ‘பறக்கும் அதிபர் மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது.
இதில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் 13,000 கி.மீ. வரை விமானம் தரையிறங்காமல் பறக்க முடியும். நடுவானிலேயே விமானத்துக்கு எரிபொருளை நிரப்ப முடியும்.
எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த விமானத்தில் பறந்தபடியே அணு குண்டு தாக்குதல் நடத்த அதிபர் புதினால் உத்தரவிட முடியும்.
இந்த விமானம் 55.35 மீட்டர் நீளம், 17.55 மீட்டர் உயரம் கொண்டது. இதன் எடை 250 டன் ஆகும். விமானத்தில் ஒரே நேரத்தில் 262 பேர் வரை பயணம் செய்ய முடியும்.
ஒருவேளை புதின் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் ரஷ்யாவின் விமானப் படை தளங்கள் அல்லது நட்பு நாடுகளின் விமானப் படை தளங்களில் தரையிறக்கப்படும்.
ஒவ்வொரு பயணத்தின்போது இலுயுஷின் ஐஎல் - 96 - 300 பியூ ரகத்தை சேர்ந்த மற்றொரு சொகுசு விமானமும் உடன் செல்லும். அந்த மாற்று விமானத்தில் அதிபர் புதின் பயணத்தை தொடர்வார்.
இந்திய சுற்றுப் பயணத்துக்காக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து இலுயுஷின் ஐஎல் - 96 - 300 பியூ விமானத்தில் அதிபர் புதின் டெல்லிக்கு புறப்பட்டார்.
அப்போது உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அவரது விமானம் செல்லும் பாதையை ரேடாரில் கண்காணித்தனர். அவரது விமானம் ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக இந்திய தலைநகர் டெல்லியை வந்தடைந்தது.
அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு தங்கும் ஓட்டலின் குளியல் அறை, கழிப்பறையை பயன்படுத்துவது கிடையாது. அவருக்காக சிறப்பு குளியல் அறை, கழிப்பறையை ரஷ்ய தொழில்நுட்ப நிபுணர்கள் அமைப்பார்கள்.
ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படும் உணவு பொருள்கள், அழகு சாதன பொருட்களை மட்டுமே அவர் பயன்படுத்துவார். அவரின் பயணத்துக்காக ஆரஸ் செனட் ரக சொகுசு கார், சரக்கு விமானத்தில் கொண்டு வரப்படும். வெளிநாட்டு பயணத்தின்போது அதிபர் புதினை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.