துபாய் விமானக் கண்காட்சியில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - விமானி உயிரிழப்பு

துபாய் விமானக் கண்காட்சியில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - விமானி உயிரிழப்பு

துபாயில் நடைபெற்ற சர்வதேச விமான சாகச கண்காட்சியில், இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதன் விமானியும் உயிரிழந்திருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாயில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே, கடந்த 17ஆம் தேதி முதல் சர்வதேச விமான சாகச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் பங்கேற்று வான் சாகசங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த கண்காட்சியில் இந்தியா சார்பில் நமது விமானப் படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம் கலந்து கொண்டது. அதன்படி, கண்காட்சியின் இறுதி நாளான இன்று, தேஜஸ் போர் விமானம், வானில் அசாத்திய சாகசங்களை செய்து பார்வையாளர்களை அசத்திக் கொண்டிருந்தது.

இந்நிலையில், துபாய் நேரப்படி மதியம் 2.10 மணியளவில், வானில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த தேஜஸ் போர் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்தரத்தில் குட்டிக்கரணம் அடித்தவாறே வானில் இருந்து தரையை நோக்கி தேஜஸ் போர் விமானம் வந்தது.

ஆனால், பார்வையாளர்களோ, விமானம் சாகசத்தில்தான் ஈடுபடுகிறது என நினைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சில நொடிகளுக்குள்ளாக தரையில் வேகமாக வந்து விழுந்த தேஜஸ் விமானம் வெடித்து சிதறியது. இதில் அந்த இடமே தீப்பிழம்பாக மாறி, காண்பவர்களை பதைபதைக்க செய்தது.

இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்தாரா அல்லது பாராசூட் மூலம் தப்பினாரா என முதலில் தெரியவராமல் இருந்தது. ஆனால், விமானி உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தற்போது அறிவித்துள்ளது.

சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்தியாவின் அதிநவீன போர் விமான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா? என்ற ரீதியில் இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், விமானம் கட்டுப்பாட்டை இழந்ததும் நடுவானில் விமானியால் எரிபொருளை கொட்ட முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பெருமை தேஜஸ்

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம் தேஜஸ் ஆகும். இதன் மூலம் சொந்தமாக போர் விமானம் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் தேஜஸ் போர் விமானம் இணைந்தது. இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் மிக முக்கிய அங்கமாக தேஜஸ் இருந்து வருகிறது. மணிக்கு 2,200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. விமானம் தாங்கி கப்பலில் இருந்தே புறப்படும், தரையிறங்கும் திறன் கொண்டது. எதிரிகளின் ஏவுகணைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நவீன அம்சங்களும் இந்த போர் விமானத்தில் உள்ளன.