பிரச்சினைகளை எழுப்புவது ‘நாடகம்’ அல்ல - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி
நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகங்களை விடுத்து, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வதேரா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமரின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, "தேர்தல் நடைபெற்ற விதம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், காற்று மாசு போன்றவை மிகப் பெரிய பிரச்சினைகள். இவை விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் வேறு எதற்கு? இது நாடகம் அல்ல. பிரச்சினைகளைப் பற்றி பேசுவதும் எழுப்புவதும் நாடகம் அல்ல.
மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்க நாடகம் அனுமதிப்பதில்லை" என தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ,பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சிகள் நாடகமாடக் கூடாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.