மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் ஜப்பானியர்களின் 'Forest Bathing' - எப்படி செய்வது?
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதில், ஜப்பானிய சிகிச்சை முறைகள் உலக அளவில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. இந்த வரிசையில், ஐப்பானில் 1980-களில் உருவான 'ஷின்ரின்-யோக்கு' (Shinrin-Yoku) எனப்படும் 'வனக் குளியல்' (Forest Bathing) இன்று உலகமெங்கும் பிரபலமடைந்து வருகிறது. பரபரப்பான நகர வாழ்க்கையினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு அரிய இயற்கை மருந்தாகவும் இது பார்க்கப்படுகிறது.
ஷின்ரின்-யோக்கு என்பது, ஜப்பானிய மொழியில் 'ஷின்ரின்' என்றால் வனம் (Forest) என்றும், 'யோக்கு' என்றால் குளியல் (Bathing) என்றும் பொருள். அதாவது, காட்டு வளிமண்டலத்தில் நம் புலன்களை முழுமையாக மூழ்கடிப்பது என்கிறது NCBI ஆய்வு. இது வியர்வை வரும்படி வேகமாக நடப்பது அல்ல. ஒரு பூங்காவிலோ அல்லது அடர்ந்த வனத்திலோ மெதுவாக, அமைதியாக நடந்து, இயற்கையின் காட்சிகளையும், வாசனையையும், ஒலியையும், தொடுதலையும் உள்வாங்குவதே இதன் முக்கிய நோக்கம்.
மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பலரும் இந்த வனக்குளியல் முறையை பின்பற்றி குணமடைந்ததாக How to make your nature walks even more restorative, according to science என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஃபாரஸ்ட் பாத்திங் முறை மற்றும் அதனை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பரபரப்பான உலகத்தில் இருந்து விடுபட்டு, நம்முடைய உடல் மற்றும் மனதின் சமநிலையை மீட்டெடுக்க இந்த "வனக் குளியல்" ஒரு அற்புதமான வழியாகும். நகரவாசிகள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தூக்கமின்மை மற்றும் கவலை (Anxiety) போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், மற்றும் புத்துணர்ச்சி தேடும் எவரும் இதை செய்யலாம். சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் நிலையில் தீவிர பிரச்சனை இல்லாத அனைவரும் செய்யலாம்.
மன அழுத்தத்திலிருந்து விடுதலை!
நமது அன்றாட வாழ்வில் இருந்து விலகி, மனதை அமைதிப்படுத்தவும், உடலில் உள்ள அதிகப்படியான மன அழுத்த ஹார்மோன்களை (Cortisol) குறைக்கவும், இயற்கையின் நிதானமான ஓட்டத்துடன் நம்மை இணைத்துக் கொள்ளவும் இது செய்யப்படுகிறது. ஷின்ரின்-யோக்கு பல மருத்துவ மற்றும் மனநலப் பலன்களைக் கொண்டிருப்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவை கணிசமாகக் குறைக்கிறது.
- ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பை சீராக்கி, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
- மரங்கள் வெளியிடும் 'ஃபைட்டோசைட்ஸ்' (Phytoncides) என்ற நறுமண எண்ணெய்களை நாம் சுவாசிக்கும்போது, உடலில் உள்ள நேச்சுரல் கில்லர் (NK) செல்கள் எனப்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் நோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாடு அதிகரிக்கிறது.
- மகிழ்ச்சி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, மனச்சோர்வு (Depression) மற்றும் கவலையைக் குறைக்கிறது.
- மனது அமைதி அடைவதால், நல்ல ஆழமான தூக்கம் கிடைக்கிறது.
2017 ஆம் ஆண்டு தைவான் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், 2 மணி நேர வனக் குளியல் அனுபவம் பெற்றவர்களின் தன்னியக்க நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் உணர்ச்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாலம், இந்த குறுகிய அனுபவத்திற்குப் பிறகு இதயத் துடிப்பு மற்றும் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தன, அதே நேரத்தில் பதற்றம், கோபம், விரோதம், சோர்வு, மந்தநிலை ஆகியவையும் குறைந்ததாக குறிப்பிட்டுள்ளது.
எப்படி செய்வது?
இடம்: மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு பூங்கா, அடர்ந்த மரங்கள் கொண்ட ஒரு பகுதி, அல்லது ஒரு சிறிய காடு போன்ற அமைதியான இடத்தைத் தேர்வு செய்யவும். மரங்கள் மற்றும் செடிகள் அதிகமாக இருக்கும் இடம் அவசியம். ஏனென்றால், மரங்கள் வெளியிடும் ஃபைட்டோசைட்ஸ் தான் ஆரோக்கிய நன்மைகளுக்கு முக்கிய காரணம்.
தொழில்நுட்பத் தவிர்க்கவும்: செல்போன், கேமரா மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை அணைத்துவிட்டு, பையில் வைத்து விடுங்கள். மேலும், கவனத்தை வெளியில் உள்ள இயற்கை மீதும், உள் மனதில் ஏற்படும் உணர்வுகள் மீதும் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
நோக்கம் இல்லாமல் அலைதல்: வேகமாக நடப்பது அல்லது உடற்பயிற்சி செய்வது இந்த நடைமுறையின் நோக்கம் அல்ல. மிக மெதுவாக, நிதானமாக நடக்கவும். எங்கு செல்ல வேண்டும், எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்ற இலக்கு எதுவும் இருக்கக் கூடாது.
ஐந்து புலன்களை ஈடுபடுத்துதல்: வனக் குளியலின் மிக முக்கியமான படி இதுவே. இயற்கையை நமது புலன்கள் மூலம் முழுமையாக அனுபவிக்கவும். சூரிய ஒளி இலைகளின் இடையே ஊடுருவி வருவதை கவனிக்கவும். மரப்பட்டைகளின் அமைப்புகள், வெவ்வேறு இலைகளின் நிறங்கள் மற்றும் வடிவங்களைக் கூர்ந்து பார்க்கவும்.
இலைகள் அசைவது, நீரோடையின் சலசலப்பு, பறவைகளின் கூச்சல் போன்ற இயற்கையின் மெல்லிய ஒலிகளைக் கவனியுங்கள். மண், ஈரமான பாசிகள், பூக்கள் அல்லது மரங்களின் வாசனை ஆகியவற்றை ஆழமாக சுவாசியுங்கள்.
கைகளால் ஒரு மரத்தின் பட்டையைத் தொட்டு உணருங்கள். இலைகளின் மென்மையை, குளிர்ந்த நீரின் ஈரப்பதத்தை அல்லது கால்களால் தரையை மிதிக்கும் உணர்வை உணருங்கள். காற்றில் உள்ள புத்துணர்ச்சியையும், சுத்தமான தன்மையையும் உணருங்கள்.
அமைதியாக உட்காருதல்: இந்த நடைமுறைக்கு நடுவே, ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து, சிறிது நேரம் சும்மா உட்காருங்கள். அப்போது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை கவனியுங்கள். 1 முதல் 2 மணி நேரம் இயற்கையுடன் நேரத்தை செலவிடலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.