ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு - ரூ.1.10 லட்சத்தை தாண்டியது ஒரு சவரன் விலை

ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு - ரூ.1.10 லட்சத்தை தாண்டியது ஒரு சவரன் விலை

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு காலையில் ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் வாங்குவது சாமானியர்களுக்கு ஒரு கனவாகவே மாறிவிட்டது. அந்த அளவுக்கு தினந்தோறும் விலை ஏறிக்கொண்டே போகிறது. ஒரு நாள் சிறிது விலை குறைந்தால், அடுத்த நாளே அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்து விடுகிறது. கடந்த ஆண்டு இறுதியில், தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால், நகை வாங்குவதற்கு ஏற்ற நேரத்தை கணிக்கமுடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே குறிப்பிட்ட ஓரிரு நாட்களில் சொற்ப அளவு விலை குறைந்ததே தவிர, மற்ற நாட்களில் எல்லாம் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது.

இதனால் நகை முதலீட்டாளர்கள் தவிர பொதுமக்கள் எல்லாருக்கும் தங்கம் வாங்குவது பெரும் சவாலாக மாறிவிட்டது. இந்தியர்களின் திருமணம், சடங்கு போன்ற முக்கிய நிகழ்வுகளில் தங்கம் முக்கியப்பங்கு வகிக்கும் நிலையில், இந்த விலையேற்றமானது விசேஷங்களை இக்கட்டில் நிறுத்தி இருக்கிறது.

தங்கம் விலை

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஜன 19) கிராமுக்கு ரூ. 170 அதிகரித்து, ரூ. 13,450க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ. 160 அதிகரித்து ரூ. 13,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று (ஜன 19) சவரனுக்கு ரூ. 1,360 அதிகரித்து ரூ. 1,07,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ. 1,280 அதிகரித்து ரூ. 1,08,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மதியம் மீண்டும் கிராமுக்கு ரூ. 450 அதிகரித்து ரூ. 13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று ஒரே நாளில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,600 அதிகரித்திருக்கிறது.

வெள்ளி விலை

தங்கத்திற்கு மாற்றாக நிறைய பேர் வெள்ளியின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் தொடக்கத்தில் ரூ. 98 ஆயிரமாக இருந்த வெள்ளி விலையானது, ஒரே ஆண்டில் ரூ. 2 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்து இன்றைய நிலவரப்படி, ரூ. 3.3 லட்சமாக இருக்கிறது.

நேற்று (ஜன 19) வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 318-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ரூ.12 அதிகரித்து ரூ.330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஒரு கிலோ வெள்ளியானது ரூ.3,18,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 12 ஆயிரம் அதிகரித்து ரூ.3,30,00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.13,900

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் -ரூ.1,11,200

வெள்ளி 1 கிராம் -ரூ.330

வெள்ளி 1 கிலோ -ரூ.3,30,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதி கிராம் விலை (ரூ.) சவரன் விலை (ரூ.)
ஜனவரி 20 ரூ.13,900 ரூ.1,11,200
ஜனவரி 19 ரூ.13,450 ரூ.1,07,600
ஜனவரி 18 ரூ.13,280 ரூ.1,06,240
ஜனவரி 17 ரூ.13,280 ரூ.1,06,240
ஜனவரி 16 ரூ.13,230 ரூ.1,05,840
ஜனவரி 15 ரூ.13,290 ரூ.1,06,320
ஜனவரி 14 ரூ.13,280 ரூ.1,06,240
ஜனவரி 13 ரூ.13,170 ரூ.1,05,360
ஜனவரி 12 ரூ.13,120 ரூ.1,04,960
ஜனவரி 11 ரூ.12,900 ரூ.1,03,200