அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்!

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம், நீதித்துறை சுதந்திரம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடந்தது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் இப்போது குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு: பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ்நாட்டில் அதிமுக அமைத்திருக்கும் கூட்டணிக்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து திமுக அரசு தோல்வியடைந்து வருகின்றது.

கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்கள் உடன் அனுப்பாத திமுக அரசின் நிர்வாக திறமையற்ற போக்கிற்கு கண்டனம். கோவை, சேலம் , மதுரை ஆகிய மாநகரங்களில் ‘பஸ் போர்ட்’ அமைக்க வலியுறுத்துகிறோம்.

முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது.

அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது.அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதல்வராக்குவோம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.