சேலத்தில் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு! காவல்துறை கூறும் காரணம் என்ன?

சேலத்தில் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு! காவல்துறை கூறும் காரணம் என்ன?

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு சேலத்தில் பிரச்சாரம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதனை காவல்துறை நிராகரித்துள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், செப்.13ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார். அதன் பிறகு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அடுத்தடுத்த வாரங்களில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

செப்.27 தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கரூர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தனது பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் கரூர் துயர சம்பவம் நடந்து 54 நாட்கள் கழித்து தவெக மீண்டும் பிரச்சார வேலைகளில் இறங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் அடுத்த பிரச்சாரத்தை நடத்த தவெக முடிவு செய்தது.

அதற்காக அனுமதி கேட்டு தவெகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் நேற்று சேலம் நகர காவல் ஆணையர் அனில் குமார் கிரியிடம் மனு அளித்தார். ஆனால் விஜய் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பாதுகாப்பு காரணங்களால் அந்த தேதிகளில் பிரச்சாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாற்று தேதிகளில் அனுமதி கேட்குமாறு காவல்துறை கூறியதாகவும் தெரிகிறது.

இதனால், தவெக தலைவர் விஜய் மாற்று தேதிகளில் பிராச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், தேதி குறிப்பிட்டு விரைவில் அனுமதி பெறும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நாளில் சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள போஸ் மைதானம் அல்லது கோட்டை மைதானம் ஆகிய இடங்களில் பிரச்சாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தவெக சார்பில் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சேலத்தைத் தொடர்ந்து ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்தடுத்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.