தவெகவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளிலிருந்து 3 லட்சம் பேர் வருவார்கள்: செங்கோட்டையன் பேட்டி

தவெகவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளிலிருந்து 3 லட்சம் பேர் வருவார்கள்: செங்கோட்டையன் பேட்டி

வரும் தேர்தலில் வெளிநாடுகளில் உள்ள 3 லட்சம் பேர் தமிழகம் வந்து வாக்களிக்க உள்ளதாக தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு களத்தில் முதன்முறை போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (ஜன 25) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செயல் வீரர்கள் மத்தியில் விஜய் பேசினார். அதில் குறிப்பாக "அரசியலில் இருக்கும்போதும் சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் சரி, விஜய் ஊழல் செய்யவே மாட்டான். ஒரு துளி ஊழல் கறை கூட படியாது. படியவும் விடமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தலைவர் (விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் நேற்று உரையாற்றி இருக்கிறார். அவர் உரையைப் பொறுத்தவரை தமிழகம் வளம் பெறுவதற்கு, தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் தருவதற்கு ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று தெளிவாக முழக்கமிட்டு இருக்கிறார்.

அதனை கருத்தில்கொண்டு தான் தமிழர்கள் தேர்தல் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். தேர்தல் தேதியை அறிவித்தவுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்களிக்க தயாராகி வருகின்றனர்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், உலக வரலாற்றிலேயே நம்முடைய தலைவர் விஜய் ஒருவருக்கு தான் இத்தகைய புகழ் உள்ளது என்று கூறினார்.