இயக்குநர் மணிகண்டனை தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை: இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

இயக்குநர் மணிகண்டனை தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை: இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

இயக்குநர் மணிகண்டனுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரத்தை கொடுக்க தவறிவிட்டதாக இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.

கூத்துப்பட்டறை கலைஞரான ஹரிஷ் ஓரி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘வெள்ளகுதிர’. இப்படத்தை நடிகரும், இயக்குநருமான மணிகண்டனின் உதவி இயக்குநராக இருந்த சரண் ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார். பரத் அகசிவகன் இசையமைத்துள்ளார். மலைவாழ் மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ’டிரைலர் வெளியிட்டு விழா’ சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் பேரரசு, “இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநரின் படம் என்பதால் படத்தை பார்க்க நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். இயக்குநர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல, கடைசி விவசாயி படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. அவருக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், மாநில அரசு அதனை செய்யத் தவறிவிட்டது.

தமிழக அரசு சார்பில் அவரை அழைத்து பாராட்டிருக்க வேண்டும். மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் படைப்புகளை பாராட்டுவது போல இவரையும் அழைத்து பாராட்டிருக்க வேண்டும். ஒரு வேளை முதல்வரால் நேரமின்மை காரணமாக செய்ய முடியவில்லை என்றால் செய்தித் துறை அமைச்சரையாவது பாராட்டு தெரிவிக்கும்படி கூறியிருக்கலாம்.

கமர்சியல் படங்களுக்கு கதாநாயகியை தேர்வு செய்வது சுலபம். திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அசின் போன்ற அன்றைய காலகட்டத்தில் யாருக்கு மார்க்கெட் இருக்கிறதோ அவர்களை ஒப்பந்தம் செய்து விடுவோம். ஆனால், கதைக்கேற்ற நாயகியை முடிவு செய்யும் போது அதில் சற்று தேடல் இருக்கும். அதனை இயக்குநர் அழகாக பூர்த்தி செய்துள்ளார்” என்றார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி, “கேப்டன் பிரபாகரன் திரைப்படம் எடுப்பதற்காக அன்றைய காலகட்டத்திலேயே நான் பல்வேறு விதமான மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று இருக்கிறேன். மலையில் விசிப்பவர்கள் பலரின் வீட்டு வாசலில் கதவும் இருக்காது, பூட்டும் இருக்காது. அந்த அளவிற்கு மனிதர்களை நேசிக்கக் கூடிய மக்களாக மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.