தீபாவளியை முன்னிட்டு துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகும் பைசன் திரைப்படம்!

தீபாவளியை முன்னிட்டு துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகும் பைசன் திரைப்படம்!

தீபாவளியை முன்னிட்டு நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கித்தில் அக்டோபர் -17 அன்று பைசன் திரைப்படம் வெளியாகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக கால் பதித்தார். இவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், இப்படம் உருவாக்கம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியது,"பைசன்" என் கரியரில் முக்கியமான படம். மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன். இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது, பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது. இந்த படத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ் விக்ரம், தயாரிப்பாளர் பா. ரஞ்சித், நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்தக் கதையை அவ்வளவு எளிதாக ரெகுலர் சினிமா சூட்டிங் மாதிரி பண்ணி விட முடியாது.

ஒரு வருடம் பயிற்சி செய்து முழு கபடி வீரராக, தென் தமிழகத்து கிராமத்து இளைஞனாக மாறுவதும், கடுமையான உடல் உழைப்பும் தேவைப்பட்டது. படம் துவங்கி கொஞ்ச நாளில் துருவால் முடியவில்லை. ரொம்ப கஸ்டப்பட்டான். வேறு கதை பண்ணிடலாமான்னு அவனிடம் கேட்டேன்."இல்லை கஷ்டமாத்தான் இருக்கு, நீங்களும் இந்த படம் பண்ணனும்னு வெறியா இருக்கீங்க, உங்களுக்கு கனவுப் படம்னு தெரியுது, நான் உங்களை அப்பா மாதிரி நினைச்சிக்கிட்டு வரேன், நீங்க என்ன பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்" என்று சொன்னான். அந்த வார்த்தைகள் என்னை அசைத்துப் பார்த்துவிட்டன. அவனுக்கு எதுவும் நடந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொண்டேன். நான் மற்ற படங்களை விட அதிகபட்சமான உழைப்பை போட்டேன். எல்லாத்தையும் நான் நல்லபடியாக செய்து முடிப்பேன் என்று நம்பினேன். மொத்த குடும்பமும் நம்பியது.

எல்லா நடிகர்களும் இதை செய்ய மாட்டாங்க, இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து, படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் ஒதுக்கி முழுமையாக அர்பணித்திருக்கிறார் துருவ். படம் பார்த்தால் இதன் அசல் தன்மை தெரியும். என் நலன் விரும்பிகள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு "நீ சாதிச்சிட்ட நினைச்சதை அடைஞ்சிட்டேன்னு" சொன்னாங்க, தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார் என்றும் அவரின் சினிமா ஆரம்பமாகி விட்டது என்றும் ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள். அதை கேட்ட எனக்கும் துருவுக்கும் பெரும் மகிழ்ச்சி.. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்" என்றார் மாரிசெல்வராஜ்.