கரூர் விபத்து: தவெக-விடம் இருந்து வீடியோ பதிவுகளை பெற்றுக்கொண்ட சிபிஐ

கரூர் விபத்து: தவெக-விடம் இருந்து வீடியோ பதிவுகளை பெற்றுக்கொண்ட சிபிஐ

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை சிபிஐ அதிகாரிகளிடம் தவெக நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

கரூரில் செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்ஐடி அமைத்து உத்தரவிட்டது.

கரூர் விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள்(SIT) விசாரணை ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் அக்டோபர் 16 அன்று ஒப்படைத்தனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்து நடந்த செப்டம்பர் 27 அன்று விஜய் வாகனத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி பதிவுகள் விசாரணைக்கு தேவைப்படுவதாக நவம்பர் 3-ஆம் தேதி சிபிஐ சம்மன் தவெக அலுவலகத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், சிபிஐ அதிகாரிகள் முன் தவெக கட்சியின் மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் அரசு மற்றும் பனையூர் தவெக தலைமை அலுவலகப் பணியாளர் குரு சரண் ஆகிய இருவரும் ஆஜராகினர்.

அப்போது விபத்து நடந்த அன்றைய தினத்தின் சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்டுடிஸ்க், ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகள், நேரலைக் காணொலிகள் என அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.