நவம்பர் 8.... ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நினைவிருக்கிறதா?
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8.15 மணி...
அப்போது தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவரது அறிவிப்பால், நாடே பெரும் அச்சத்தில் உறைந்து போனது. ஏழைகளோ என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தார்கள். பலருக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆம், பிரதமர் நரேந்திர மோடி, அதுவரை நாட்டில் பெருமளவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் இனி செல்லாது என அறிவித்தார்.
அடுத்த ஒரு சில நாட்களில் தங்களிடமிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. தங்களிடம் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு நடையாய் நடந்தும், தங்கள் வேலைகளை விட்டு விட்டு பணம் எடுப்பதற்காக மணிக்கணக்காக ஏன் நாள் கணக்கில் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் மையங்கிளும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்துக் கிடந்தனர்.
பண மதிப்பிழப்பால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த பலர் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டனர். நிறையப்பேருக்கு உணவுக்கே வழி இல்லாமல் போனது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் சிரமங்களை சந்தித்தனர்.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதற்கிடையே 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதுவும் திரும்ப பெறப்பட்டுவிட்டன. ஆனால் அப்போது வீழ்ச்சியை சந்தித்த பல சிறு, குறு நிறுவனங்களால் இன்னும் தலைநிமிர முடியவில்லை.
நாட்டில் ஊழல் மற்றும் கறுப்பு பண புழக்கத்தை நிறுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத நிதிகளை தடுக்கவும் பண மதிப்பிழப்பை கொண்டு வருவதாக மத்திய அரசு கூறியது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதி வரை இந்தியாவில் ரூ. 17.77 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ வங்கி அறிவித்தது. அதில் 500, 1000 ரூபாய் தாள்களின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ. 14 லட்சம் கோடி. இது ஒட்டுமொத்த பண புழக்கத்தில் சுமார் 86 சதவீதமாகும்.
பண மதிப்பிழப்பின் மூலம் இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதால் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் உண்மையில் கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். ஏனென்றால், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மதிப்பிழக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பலர் அந்த நோட்டுகளை மாற்றினர். அவர்களில் பலர் தினக்கூலி வேலை செய்பவர்களாக இருந்தனர். அவர்களிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யாருக்காக அவர்கள் பணத்தை மாற்ற வந்தார்கள்? என்பது போன்ற பல சர்ச்சைகள் அப்போது எழுந்தன.
இந்த பண மதிப்பிழப்பானது இந்திய பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது. குறிப்பாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்றி, ரூபாய் நோட்டுகளை மட்டுமே நம்பியிருந்த ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனாலேயே பண மதிப்பிழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நாளை எதிர்க்கட்சிகள் பலவும் ‘கறுப்பு தினம்’ என்று அழைத்தன. இருந்தாலும், மத்திய அரசோ, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் புதிய முயற்சி என்று கூறியது.