உருவ கேலி செய்தது நியாயமா? டென்ஷனான ’96’ பட நடிகை!
’அதர்ஸ்’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பில், முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் யூடியூபர்கள் தனது உடல் எடை குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அது உருவ கேலியை செய்ததற்கு சமம் என நடிகை கௌரி கிஷன் தெரிவித்தார்.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் '96' பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் ’அதர்ஸ்’ (others) திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (நவ.07) திரைக்கு வர வெளிவரவுள்ள நிலையில், இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவன், கதாநாயகி கௌரி கிஷன், இயக்குநர் அபின் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதற்கு முன் அதர்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பில், படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே? நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன், எனது எடை குறித்து இது போன்ற முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இத்தனைக்கும் அவர்கள் அனுபவம் வாய்ந்த வயதான யூடியூபராக இருந்து கொண்டு, இதுபோன்ற கேள்விகள் முறையானது அல்ல என கேள்வி எழுப்பியது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ’அதர்ஸ்’ பட செய்தியாளர் சந்திப்பில், யூடியூபர்கள் சிலர், இந்த பிரச்னையை முன் வைத்து நடிகை கௌரி கிஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன், ”உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவ கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும், அது என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வியாகும். எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது, படத்தில் நான் ஒரு மருத்துவர் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தேன், அது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நீங்கள் கேள்வி கேட்கவில்லை அல்லவா, என் மீது எந்த தவறும் கிடையாது” என்றார்.
இருப்பினும் நடிகை கௌரி கிஷனை நோக்கி பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் அவர் கண் கலங்கினார்.