பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பெண் பொறியாளர் கைது

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பெண் பொறியாளர் கைது

பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு விடுத்த தமிழகத்தை சேர்ந்த பெண்ணை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, விமான நிலையம், அரசியல் கட்சி தலைவர்களின் வீடு என வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தினசரி செய்தியாக மாறியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுத்தாலும், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.

அந்த வகையில் பெங்களூர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், ரெனே ஜோஷில்டா (30) என்பவரை பெங்களூரு மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த அந்த பெண், எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ பட்டம் பெற்றுள்ளார். பெங்களூரில் மட்டும் அவர் மீது ஏழு வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்ட விடுக்கப்பட்ட வழக்கில், விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப பின்னணி கொண்ட அவர், ஒரு ரோபா பொறியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் விபிஎன் பயன்படுத்தி இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர் 6-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை நிர்வகித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள 11 மாநிலங்களை சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனிடையே காதலன் தன்னை விட்டு பிரிந்து சென்றதால், அவரை பழிவாங்க அவர் பெயரில் போலி கணக்கை தொடங்கி இவர் மிரட்டல் விடுத்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.