'தற்கொலைப் படை தாக்குதல்' டெல்லி குண்டு வெடிப்பில் முக்கிய திருப்பம்! சதி திட்டம் தீட்டியவர் கைது

'தற்கொலைப் படை தாக்குதல்' டெல்லி குண்டு வெடிப்பில் முக்கிய திருப்பம்! சதி திட்டம் தீட்டியவர் கைது

தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய மருத்துவர் உமர் நபியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாக காஷ்மீரைச் சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

டெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும், சில மருத்துவர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளதை என்ஐஏ கண்டறிந்துள்ளது.

முன்னதாக, குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்தது காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்பது தெரிய வந்தது. தற்கொலை படை தாக்குதல் முறையில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பில் மருத்துவர் உமர் நபியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பல்வேறு குழப்பங்கள் எழுந்த நிலையில், இது தற்கொலைப் படை தாக்குதல் என்பதை என்ஐஏ உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தாக்குதலுக்கு உதவியதாக காஷ்மீரைச் சேர்ந்த அமிர் ரஷீத் அலியை டெல்லியில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குண்டுவெடித்த காரை ஒட்டி வந்த மருத்துவர் உமர் நபியுடன் சேர்ந்து, அமிர் ரஷீத் அலி பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், தற்கொலைப் படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்காக இவர் டெல்லிக்கு வந்திருந்தும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கை டெல்லி காவல்துறையிடம் இருந்து கையகப்படுத்தியுள்ள என்ஐஏ அமைப்பு மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி உயிரிழந்த மருத்துவர் உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தையும் என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது. புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த உமர் நபி, ஃபரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தைக் கண்டறியவும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணவும் என்ஐஏ பல தடயங்களைத் அலசி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தககது.